"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 29, 2012

பக்தமீரா பகுதி 3


7.
ராமனாய் பூவுலகை காத்தவனே அன்பனே
சாரதியாய் நின்று அர்ஜுனனைக் காத்தவனே
ஒரே ஒரு முறை என்னை ஏற்பாயோ நீயும்
உன்னில் என்னை தொலைப்பேனே நானும் கண்ணா

8.
என்னிதழ்கள் என்றும் துதிப்பது உன் நாமமே
என்னிதயம் பூஜிப்பது உன்னை என்றுமே
என் பாவங்கள் உன் பாதத்தில் தொலைக்க
உன்னையே சரண் என அடைந்தேன் கண்ணா

9.
உந்தன் ஸ்பரிசம் தீண்ட நானும் வேண்டி
உயிராய் உருகி நிற்பேன் காலங்கள் கோடி
உன் கருணை என்றே காத்திருந்து நானும்
உன்னடியே சேர்வேன் உறுதி இது கண்ணா...

உறவுகள்....


" இந்த பிராப்ளம் சால்வ் பண்ணமுடியாதா அப்பா? “ மகன் எழிலரசனின் குரல் கேட்டு கவனம் சிதறியது சிவநேசனுக்கு...

“ என்ன பிராப்ளம் எழில் ? “ அன்புடன் மகன் எழில் தலை கலைத்து கேட்டான் அப்பா சிவநேசன்

“ அதான் மாமாவுக்கும் உங்களுக்கும் நடக்கிறதே அது தான் “

” உங்களுக்குள் பிரச்சனை என்பதால் பாருங்க எங்களால் மாமாவின் குழந்தை சாய்ரோஷனை சந்திக்கமுடியவில்லையே ” குரல் உடைந்து அழத் தொடங்கினான் எழில்.

சட்டென மனம் பதறி அணைத்துக்கொண்டான் சிவநேசன் குழந்தையை...

பெரியவர்களின் பிரச்சனையால் பிள்ளைகள் படும் அவஸ்தையை கண்டு ஒன்றும் செய்ய இயலாமல் எப்படி இந்த பிரச்சனையை சரி செய்வது என்று யோசித்தபடி எழிலுடன் வீடு வந்து சேர்ந்தான் சிவநேசன்.

“ என்னங்க குழந்தைக்கு நாளைக்கு பள்ளிக்கு எடுத்துச்செல்ல பேனா வாங்கினீர்களா? “ கேட்டுக்கொண்டே ராகினி மகனை உற்று நோக்கியபோது எழில் சுரத்து குறைந்து சோர்வுடன் இருந்ததை கண்டு பதறினாள்.

“ என்னாச்சு எழிலுக்கு? “ என்றபடி எழில் முகத்தை தன் கைகளில் ஏந்தினாள் ராகினி..

“ சாய்ரோஷனை போய் பார்க்கவேண்டுமாம் எழிலுக்கு “ ஆயாசமாக உட்கார்ந்தான் சொல்லிக்கொண்டே சிவநேசன்..

“ பழைய பிரச்சனைகளை எல்லாம் மறப்போம்.. தம்பியிடம் நீங்க பேசுங்களேன் நாளை... என் தம்பி தவறு செய்யவில்லை என்றாலும் அவன் தன் மனைவி பேச்சைக்கேட்டுக்கொண்டு நம்மை மோசமாக பேசியது குற்றம் தான் ஒத்துக்கொள்கிறேன் “

” ஆனால் அவனும் தான் என்ன செய்வான் பாவம்... மனைவி பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசினால் அவன் நிலையும் மோசமாகுமே...”

“ நீ எப்பவும் உன் தம்பிக்கே சப்போர்ட் பண்ணு. மனைவியை அடக்க துப்பில்லை அவனுக்கு.. இன்னைக்கு இங்க அவன் இருப்பது யாரால் என்ற நன்றி கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? வேகமாக பொரிந்து தள்ளினான் சிவநேசன்.

“ பொறுமையா இருங்க ப்ளீஸ்.... அவன் நம் நன்மையை உணரலைன்னாலும் பரவாயில்லை... அவன் நல்லா இருந்தாலே போதும் “ கணவன் அறியாது தன் கண்ணீரை அடக்க சிரமப்பட்டாள் ராகினி.

“ என் குழந்தை போல அவனை நினைத்தேனே... இப்படி பேசிவிட்டானே “ ஆதங்கத்தில் குமுறினான் சிவநேசன்.

“ உங்களுக்கு தெரியுமா? அவன் உங்களை வெறுக்கவில்லை உங்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருக்கிறான்.. அவன் வெறுப்பது என்னைத்தான்... என்றாவது உண்மை உணர்ந்து திருந்தி திரும்பி நம் வீட்டுக்கு வருவான் பாருங்க. எனக்கு கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது “  என்றாள் ராகினி.

“ நீ இன்னமும் எல்லோரையும் நம்பி ஏமாந்துக்கொண்டே இரு.... எல்லோரையுமே நல்லவங்கன்னு நம்பிக்கிட்டே இரு... இது கலிகாலம் ராகினி... எல்லோருமே சுயநலவாதிகள். தான் மட்டும் நல்லா இருந்தா போதும் தன் குடும்பம் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கும் சுயநலவாதிகள் “ இயலாமையால் கண்கள் கலங்கியது சிவநேசனுக்கு.

“ நல்லதுக்கு தான் எப்பவும் சோதனைகள் தொடருங்க. ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கு மட்டுமே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச்சொல்லி புருஷனை நம்பவைத்து நமக்கு எதிராக எதிர்த்து பேசவைத்து நம்மை பிரித்தது போதாதென்று நம்மை பற்றி இழிவாக சொல்லிக்கொண்டு இருக்கா. தம்பியும் அதை நம்பிக்கொண்டு நம்மை எதிரியாக நினைக்கிறான். நாம் நால்வரும் உட்கார்ந்து பேசினால் தம்பி மனைவி சொன்னதெல்லாம் பொய் என்பது ஊர்ஜிதமாகும் கண்டிப்பா... ஆனால் அதை அவள் விரும்பவில்லை... நம்மை அவனுடன் சேர்க்காமல் பிரிப்பதில் தான் உறுதியாக இருக்கிறாள். நான் மனிதர்களை நம்பலைங்க. ஆனா கடவுளை நம்புகிறேன். உண்மைக்கு என்னிக்கும் சக்தி அதிகம் சோதனைகளும் அதிகம்... சோதனைகளை கடந்து உண்மை உணர்ந்து தம்பி திருந்தி வருவான் நம்மிடம் அதுவரை அமைதியாக பொறுத்துக்கொள்வோம் எல்லாம் “ சொல்லி முடித்தாள் ராகினி....

“ இல்ல ராகினி என்னால் அப்படி இருக்கமுடியலை, என்னால் அவனை மறக்கவும் முடியவில்லை. நான் அவனை எல்லாம் மறந்து மன்னிக்க தயார். வா நாம இப்பவே போவோம் உன் தம்பி வீட்டுக்கு “ என்று கிளம்பத் தயாரானான் சிவநேசன்.

காரில் உட்கார்ந்திருந்த எழிலுக்கு ஒரே கொண்டாட்டம் இத்தனை நாட்கள் சாய்ரோஷனை பார்க்கவே இல்லையே. எப்படி இருப்பான் என்னிடம் நல்லா பேசுவானா என்று யோசித்தபடியே உறங்கிவிட்டான்.

சிவநேசன் ராகினியின் தம்பி ராகவன் வீட்டுக்கு காரை வேகமாக விரட்டினான்...

மூவரும் வீட்டை நெருங்கி தூங்கிக்கொண்டிருந்த எழிலை தோளில் தூக்கிக்கொண்டு ராகவன் வீடு நெருங்கி சிவநேசன் ஆவலாக காலிங் பெல் அழுத்த முனைந்தபோது உள்ளிருந்து ராகவனின் மனைவி உச்சக்குரலில் ராகவனிடம் கத்திக்கொண்டிருந்தாள்...

“ உங்களுக்கு இப்ப கார் லைசன்ஸ் கிடைச்சிட்டுது எவ்வளவோ சிரமப்பட்டு... நல்ல வேலையும் கிடைச்சு அதிக சம்பளமும் கிடைச்சுட்டுது... இனி உங்க அக்காவும் மாமாவும் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு ஓடிவந்து ஒட்டிக்கொள்ளப்போறாங்க உங்கக்கிட்ட பணம் பிடுங்க பாருங்க “ என்றாள்.

வெளியே நின்றிருந்த ராகினியும் சிவநேசனும் அதிர்ச்சியில் உறைந்து ஒன்றும் பேசாமல் வந்த வழி திரும்பி இறங்கி காருக்குள் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்தான் சிவநேசன்...

உறக்கம் கலைந்து எழில் “ அப்பா மாமா வீடு வந்துவிட்டதா?? “ என்று ஆவலுடன் கேட்டான்.

“ இல்ல தங்கமே உங்க மாமாவுக்கு போன் செய்தேன் இப்ப தான். மாமாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து அமெரிக்காவுக்கு போயாச்சாம் “ சுரத்தில்லாமல் குழந்தையிடம் பொய் சொன்ன குற்ற உணர்வோடு தலை குனிந்திருந்தனர் ராகினியும் சிவநேசனும்..

Monday, August 27, 2012

பக்தமீரா தொடர்ச்சி....

4.
துன்பத்தில் என்றும் துணை நின்றவனே
துக்கங்கள் என்னை சேராது காத்தவனே
துடித்த இதயத்தில் என்றும் நிறைந்தவனே
துளியும் மாறாத அன்பு என்பேன் கண்ணா...

5.
விளையாட்டு குழந்தை நீயோ மதுசூதனா
மனதில் கள்ளம் மறைக்காதவன் நீயென்பேன்
உன்னை துதிக்கையில் என்னை மறந்தேன்
இன்னும் என்னை நோகவைப்பதும் ஏனோ கண்ணா?

6.
அசுரர்கள் ஆணவம் அழித்தாய் அன்று
அன்பெனும் இதயத்தில் மலர்வாய் என்று
கன்னத்தில் முத்தமிட்டு மகிழ துடித்து
காத்திருக்கும் மீராவை ஏமாற்றாதே கண்ணா

Sunday, August 26, 2012

பக்தமீரா...


1.
வாழும் நொடிகளில் உன் நினைவன்றி ஏதுமில்லை
சொர்க்கம் தேடி வழி அறிந்ததில்லை என்றும்
மீராவாய் உந்தன் மனம் சென்றடைந்து
நீயே நானாய் என்றாவேன் கண்ணா?

2.
உயிராய் உன்னை நினைத்ததாலே நானும்
என்னை உனக்கு இன்முகத்தோடு தந்தேன்
தளிர்நடையிட்டு என்னை மயக்கிய மாதவா
புன்னகை பூக்களால் சீராட்டு கண்ணா....

3.
உன் மௌனம் என்று கலையும் சொல்நீ
பாராட்டி சீராட்டி என் மடி சேர்வதெப்போது
வாழ்த்தி பாமாலைகள் பலநூறு சூட்டி
சேயாக உன்னை நானணைத்தேன் கண்ணா...

Saturday, August 25, 2012

சோயா 65 சாப்பிடுவோமா?

சோயா - 65

அதென்ன எப்ப பார்த்தாலும் சிக்கன் 65?? நான்வெஜ் சாப்பிடாதவங்க சாப்பிடறமாதிரி எதுனா செய்து பார்க்கலாமா? புதுசு புதுசா எதுனா செய்து அதுக்கு ஒரு பேரும் வெச்சு சமைச்சு ஆத்துக்காரருக்கு கொடுத்து அவர் அதை வாயில் போட்டு முழுங்குமுன்னாடி முன்னூறு முறை நல்லாருக்கா நல்லாருக்கான்னு கேட்டு உயிரெடுத்து நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம்... உடனே இங்க போட்டுட்டா என்ன யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு ஒரு நல்ல எண்ணத்தால ( நிஜம்ம்ம்ம்ம்மா தாம்பா நம்புங்க) போட்டுட்டேன்... படிங்க. சமைச்சு பாருங்க... சாப்பிட்டு நல்லாருந்தா சொல்லுங்க சரியாப்பா?

தேவை

ஊறவைத்த சோயா மீல்மேக்கர், இஞ்சிபூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , க்ரிஸ்பியா இருக்க கொஞ்சூண்டு அரிசிமாவு, எலுமிச்சை ஜூஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணை..

செய்முறை...






மீல்மேக்கரை நல்லா கழுவிட்டு ஒரு மணி நேரம் நீர்ல ஊறவெச்சுட்டு அதை பிழிஞ்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அதுல உப்பு, காரம், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, எலுமிச்சை ஜூஸ், அரிசிமாவு எல்லாம் போட்டு பிசிறிவெச்சிட்டு ஒரு மணி நேரம் ஊறவெச்சிட்டு கடாய்ல எண்ணை ஊற்றி இதை கொஞ்சம் கொஞ்சமா போட்டு பொரிச்சு எடுத்து தட்டுல அடுக்கி சூடா சாப்பிட்டு பாருங்க... எப்டி இருக்கு? நல்லாருக்கு தானே??


Related Posts Plugin for WordPress, Blogger...