"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 10, 2007

விரிவாக என்னைப்பற்றி...

எனக்கு திறமை இருக்கிறதா
திறமைகளை வளர்த்ததுமில்லை
முழுமையாக்க முயற்சித்ததுமில்லை

இசையும் நடனமும் கற்றதும்
தாத்தா பாட்டியின் உபயத்தில்
வளர்ந்தது அவர்களிடத்தில் தானே
தாய்ப்பால் குடித்ததுமில்லை
தாயின் அருமை அறிந்ததுமில்லை

தெளியாத நினைவுகளாக
கைப்பிடித்து தாத்தா கூட்டிச்சென்ற
கடற்கரையும் உண்ட வெண்ணை பிஸ்கெட்டும்
கலங்கலான நினைவுகளாக

அவர் மொழியில் (குஜராத்தி ப்ராமின்)
மஞ்சு அக்கா என்று அன்போடு
தலை தடவி ஊட்டி விட்ட ஞாபகம்

இரண்டாம் வகுப்பு பரிட்சை நேரம்
ஞாபக மறதி குட்டி மஞ்சு
பரிட்சை அட்டை மறந்து வீட்டில் வைக்க

அதை கொண்டு வந்து தாத்தா கொடுத்த
நினைவுகள் மறக்கவே இல்லை
வெள்ளை உடுப்பு தாத்தா சொன்னது
நல்லா எழுதுடா டாட்டா கூட்டிட்டு போரேன்

சொன்னவர் மாலை பள்ளி முடிந்து
வீட்டில் சென்ற போது தாத்தா இறந்தவராக
கூட்டிட்டு போறேன்னு சொன்ன தாத்தா
மீளா உறக்கத்தில் வாக்குறுதி காற்றில்

இறப்பென்றால் தெரியாத வயதல்லவா
என்னை கட்டிக்கொண்டு பாட்டி அழ
மௌனமாய் அம்மா அப்பா அடுத்து நிற்க
அம்மா வயிற்றில் என் கடைசி தம்பி

பாட்டியிடம் வளர்ந்ததாலோ
தாத்தாவின் இறப்புக்கு பின்னர்
இன்னும் என்னை தனியாக்கி
உலகத்தில் என்னை தவிர யாருமில்லை

பூஜையறையில் தனியாய் நான்
என் சம்பாஷணை விக்கிரங்களோடு
தெய்வத்தை மதித்து பயந்து

தொழுத ஞாபகமே இல்லை எனக்கு
என் அன்பு நண்பர்களே என்றழைத்து
அபிஷேகம் ஆராதனை....

தீயகுணம் ஒன்றுமில்லை
திருடியதில்லை திருடிக்கொண்டு
பொய் சொல்ல முயன்றதில்லை

ஏமாற்றியதில்லை ஆனால் முன்கோபம் அதிகம்
அன்னம் வைக்கும் தட்டை
முகத்தில் எறிந்த ஞாபகம் இன்றுமுண்டு

யாருக்கும் இல்லை இத்தனை கோபம்
ஏன் எனக்கு மட்டும் ஜாதகக்கட்டு
பார்த்த மஹான் சொல்கிறார் பாட்டியிடம்

முனிவர் பிறந்த நட்சத்திரம் அனுஷமாம்
பகைமை கொள்ளாதீர் இப்பெண்ணிடம்
இவள் உமிழும் வார்த்தைகள் என்றும்
வீரியம் அதிகம் சத்தியமாக பலிக்கும்

நினைவு தெரிந்து யாரையும்
சுடுசொல் வீசி துன்புறுத்தியதில்லை
உடைத்ததுண்டு தொலைக்காட்சி பெட்டியை
பாட்டி அன்புடன் என்னை அருகே அழைத்து

உன்னால் பயன்பெறுவோராக இருக்க
அன்பை மட்டுமே ஆயுதமாக
உன்னுடன் வைத்துக்கொள்......

இன்றும் அப்படியே அதே அன்புடனே
வார்த்தைகளில் என்றும் தித்திப்பு மட்டுமே
குனிந்த தலை நிமிராது ரோட்டில் நடந்து

ஆண்களை முழுமையாக வெறுத்து
பார்க்கும் ஆண்களில் அப்பனை கண்டதாலோ
ஆண்கள் என் அகராதியில் தீண்டத்தகாதவர்
காதலிக்கும் வயதிலும் காதலை வெறுத்து

திருமண வயதில் திருமணத்தை வெறுத்தேன்
அப்பனை போலொரு கணவன்
அமைந்து விட்டால் பயத்தில்
எத்தனை முறை கண்விழித்து நான்

விலகினால் தான் தங்கைக்கு திருமணம்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது
என்னை தன் அண்ணனுக்கு பார்க்க வந்து
வேண்டாம் பாவம் சிறு பெண் என்று

மறுத்து போன மாப்பிள்ளையின் தம்பி
ஐந்து வருடம் கழித்து தனக்காக என்னை
பார்க்க வந்து பார்த்த உடனே

சட்டென சம்மதம் கூறி பெண்ணுக்கு
என்னை பிடித்தால் பேசலாம் மேற்கொண்டு
இந்த குணம் தாய் தந்தையர் இஷ்டப்பட

மங்கல நாண் என் கழுத்தில் பூட்டி
என்னை தன் இதயத்தில் இருத்தி
மனைவி என்ற அந்தஸ்தை நிலைநிறுத்தி

தாய்மை என்ற அதிகப்படி பதவி தந்து
பிள்ளைகள் இரண்டும் இப்போது எங்களுடன்
ஆண்டுகள் பதினெட்டு திருமணம் கழிந்து....

4 comments:

  1. எளிமையான வரிகளில் உனது இயல்பான எளிமையான வாழ்க்கையை விவரித்த விதம் மலைக்க வைத்தது மஞ்சு..

    அன்பான தோழியாக ஆண்டுகள் நான்கினில் உன் இனிய குணங்களையும் இன்சொல் தேற்றுதலையும் அன்புடன் பின்பற்றி பக்குவமடைந்த ஓர் இனிய நண்பன் என்ற வகையில் வாழுகின்ற தெரசாவாய் உன்னை காண்கிறேன்..

    நீடூழி நீ வாழ்ந்து அன்பை உலகுக்கு வழங்கி சீருடன் வாழ் வாழ்த்துகிறேன்.

    கலைவேந்தன்

    ReplyDelete
  2. அன்பு மகளே
    வாழ்க

    உன்னைப் பற்றிய வரலாறே-உனக்கு
    உற்றத் துணையும பெரும்பேறே
    அன்னை அன்பில் ஆட்பட்டே-பெற்ற
    அப்பாவாலே துயர் பட்டே-அது
    என்னை வருத்திய செய்தியம்மா-உன்
    ஏக்கத்தை நன்கே பெய்தியம்மா
    தென்னைபோல பயன் தருவாய்-நல்
    தேனின் சுவையினை நீதருவாய்
    பெண்ணே இரண்டு பெற்றேன- நான
    பெருமை முற்றும் உற்றேனே
    கண்ணாய் என்னை நோக்கின்றார்தினம்
    கருத்தாய் இமைபோல் காக்கின்றார்
    எண்ணம் எல்லாம் உயர்வாக-வாழ்வில்
    எண்ணிச் செயல்படின் துயர்போக
    மண்ணில் நாமும் வாழ்வோமே-மனம்
    மகிழச் சுற்றம் சூழ்வோமே

    புலவர் சா இராமாநுசம்


    ReplyDelete
  3. அன்பின் மஞ்சுபாஷினி - ஒன்றும் புரியவில்லை - விரிவாக் கூறி இருந்தாலும் தொடர்பில்லை - தாதாதா இறந்த பின்னும் பாட்டியுடனேயே இருந்து - தாய்ப்பால் குடிக்கவும் வாய்ப்பில்லாமல் - முன் கோபத்தினால் - தனியாகவே இருந்து - பாட்டியின் கூற்ருப்படி அன்பினையே ஆயுதமாக்கி - தந்தையின் செயல்கலால் ஆண்களையே வெறுத்து ஒதுக்கி - தங்கையின் திருமணத்தினை மனதில் கொண்டு - தன் அண்ணனுக்குப் பெண் பார்க்க வந்தவன் சிறு பெண் தானெ எனப் பொறுத்திருந்து தானே திருமணம் செய்து இல்லறம் நல்லறமாக இரு மழலைகள் வழங்கி - ஆண்டுகள் 18 நலமே கழிய - மன்ம மகிழ - சுற்றம் சூழ - மண்ணில் வாழும் குணம் நன்று - நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பை மட்டுமே ஆயுதமாக
    உன்னுடன் வைத்துக்கொள்......


    அன்பெனும் ஆயுதம் கவசமாய் இருக்கும்போது எல்லாமே நன்மையில்தான் முடியும். பிள்ளைப்பருவம் முதல் மணப்பருவம் வரை கவிதை மனதைத் தொட்டது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...